முகமன் (ஸலாம்) வாழ்த்து

ஜும்ஆ பயான் : 112
13 : நவம்பர் : 2020
ஹிஜ்ரி வருடம் 1442
ரபியுல் அவ்வல் மாதம் பிறை 26

பயான் தலைப்பு

முகமன் (ஸலாம்) வாழ்த்து

முன்னுரை

وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏
(எவரேனும்) உங்களுக்கு “ஸலாம்” கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:86)

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ‏
கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு வாழ்த்துரை (ஸலாம்) கூறப்படும்.
(அல்குர்ஆன் : 36:58)

பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும்.

யார் யாருக்கு சலாம்

திருமண வீடுகளில் மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் கூறலாம். இரு தரப்பினருக்கும் நிம்மதி அவசியமானது.

காலையிலும் கூறலாம். மாலையிலும் கூறலாம். இரவிலும் கூறலாம்.

பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் கூறலாம்.

ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளுக்கும், நோயாளிகள் நோயற்றவர்களுக்கும் கூறலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம்.

எந்தவிதமான கேவலமோ, அவமரியாதையோ ஏற்படாமல் எல்லோருடைய மரியாதையையும் பேணும் சொல்லாக இந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சொல் அமைந்துள்ளது.

ஸலாம் என்றால் என்ன

ஸலாம் என்பது ஓர் அரபுச் சொல்லாகும். இச்சொல்லை உரிய முறையில் சொல்வதென்றால் “ஸலாம்” என்ற இந்த சொல்லிற்கு முன்னால் அலிப், லாம்
என்னும் இவ்விரண்டு ஹர்புகளையும் (எழுத்தக்களை) சேர்த்து “அஸ்ஸலாமு” எனச் சொல்லவேண்டும். “அஸ்ஸலாமு” என்றால் காணிக்கை, ஈடேற்றம், சாந்தி என்று சொல்லப்படும். இவை வெளிப்படையான பொருள்களாகும். வெளிப்படையான இந்த பொருள்களுக்கும் விளக்கம் கூறப்படுகின்றது.

காணிக்கை என்றால்: அன்பளிப்பு போன்ற ஒரு விரும்பத்தக்க நன்மையை விளைவிக்கும் நற்செயலாகும்.

ஈடேற்றம் என்றால்: அல்லாஹ்வின் தண்டணை அவனுடைய கோபம், நரக வேதனை போன்றவற்றில் இருந்து விடுபடுதல்.

சாந்தி என்றால் :

சுபீட்சம், அமைதியான வாழ்வு, சுகந்தம் என்பதனையும் குறிக்கும்.

“அஸ்ஸலாம்”என்ற வார்த்தையை (சாந்தி எனும் அமைப்பில்) விளக்கிவைக்க அறபு அகராதி தரும் உதாரணம்.)
சுவர்க்கங்களில் “தாருஸ் ஸலாம்” (சாந்தியுடைய இல்லம்) என்று ஒரு சுவர்க்கம் உண்டு.
(வலீமார்கள் அதிகம் நிறைந்த) பக்தாத் என்ற நகரிற்கு “மதீனதுஸ்ஸலாம்” (சாந்தியுடைய பட்டணம்) என்றும்,
நஹ்ருஸ்ஸலாம் (சாந்தியுடைய ஆறு) என தஜ்லா நதிக்கும் சொல்லப்படும்.

ஸலாம் என்ற வார்த்தைக்கு ஆரிபீன்களான ஞான வான்கள் தரும் விளக்கமாகிறது “அஸ்ஸலாம்” என்ற வார்த்தையானது அல்லாஹ்வின் சிறப்பு மிக்க திருநாமமாகும்.



ஸலாம் கூறுவதன் காரணம்

ஸலாம் என்பது இஸ்லாத்தில் வருவதற்கு அடிப்படையான
காரணம் ஒன்றும் இருக்கின்றது.

ஒரு முறை நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்

وعن أبي هريرة، رضي اللّه ستون ذراعاً، فلما خلقه قال: اذهب فسلم على أولئك، نفر من الملائكة، جلوس، فاستمع ما يحيونك، فإنها تحيتك وتحية ذريتك، فقال: السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، فزادوه: ورحمة الله، فكل من يدخل الجنة على صورة آدم، فلم يزل الخلق عنه، عن النبي صلى الله عليه وسلم قال: (خلق الله آدم على صورته، طوله ينقص بعد حتى الآن)
أخرجه البخارى, – باب: بدء السلام- 5463.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ என்று சொன்னான்.

அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்’ என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன’

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3326.

ஸலாம் சொல்வதில் சிறப்பான முறை

திருக்குர்ஆனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று புழக்கத்தில் இல்லாத அசலியத்தான முறையில் சொல்லப்படுகிறது.

திருக்குர்ஆனின் 7:46, 13:24, 16:32, 39:73 ஆகிய வசனங்களில் சொர்க்கத்தில் நல்லோர்களுக்கு வானவர்கள் ஸலாமுன் அலைக்கும் என்று கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

10:10, 11:69, 14:23, 15:52, 19:32, 25:63, 25:75, 33:44, 36:58, 37:79, 37:109, 37:120, 37:130, 37:181, 43:89, 51:25, 56:26 ஆகிய வசனங்களில் ஸலாமுன் அலைக்கும் எனக் கூறாமல் ஸலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஸலாம் என்பது தான் அதிகமான இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

ஸலாம் என்ற சொல்லுடன் அல் என்ற சொல்லை இணைத்து அஸ்ஸலாமு என்று கூற வேண்டும் என்பதை 19:33 வசனத்தில் இருந்து அறியலாம்.

وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்” (என்றும் அக்குழந்தை கூறியது).
(அல்குர்ஆன் : 19:33)

ஸலாம் சொல்லும் போது “கும்” என்னும் பன்மைச் சொல்கொண்டு  இவ்வாறு சொல்வதும்,
அஸ்ஸலாமு  அலைகும்
வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு, (உங்கள் மீது சாந்தியும்,அல்லாஹ்வின்
றஹ்மத்தும், பறக்கத்தும் உண்டாவதாக) அதேபோல் கூறப்பட்ட  ஸலாத்திற்கு பதில் சொல்லும் போது ‘கும்” என்ற பன்மைச் சொல் கொண்டு
பதில் சொல்வதுடன் அதன் ஆரம்பத்தில் “வ” என்னும் பதஹு சொய்யப்பட்ட  அரபு எழுத்தான “வாவு” கொண்டும் ஆரம்பித்து இவ்வாறு
“வஅலைகுமுஸ்ஸலாமு வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு” என்று ஜவாப் (பதில்) சொல்வதும் ஸலாம் சொல்வதில் மிகச்சிறப்பான முறையாகும். என்று இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

வீட்டில் நுழைந்ததும் ஸலாம்

வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறி நுழையும் வழக்கம் நம்மில் அதிகமானோரிடத்தில் இல்லை. ஆடு மாடுகள் முறையின்றி நுழைவதைப் போன்றே ஆறரிவு பெற்ற நாமும் நடந்து கொள்கிறோம். நாகரீகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலகட்டத்தில் இந்த ஒழுங்கு பேணப்படுவதில்லை. தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் ஸலாம் சொல்லியே வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஒருவருடைய வீட்டிற்கு நாம் செல்லும் போது அவர் எந்த நிலையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம். பெண்கள் பெரும்பாலும் வெளியே தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில் மறைக்கமாட்டார்கள். தன்னுடைய வீடு என்பதால் ஆடை விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பார்கள். வருபவர் ஸலாம் கூறி அனுமதி பெற்று நுழைந்தால் யாரோ ஒருவர் வருகிறார் என்று அவர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள்.

பிறரது வீட்டில் அனுமதியின்றி நுழைவது ஒழுக்கக் கேடான செயலாகவும் உள்ளது. மனிதனுக்கு ஒழுக்க மாண்புகளை கற்றுத்தருகின்ற இஸ்லாம் இந்த ஒழுங்குமுறையை மிகவும் வலியுறத்திச் சொல்கிறது. ஸலாம் கூறாமலும் அனுமதி பெறாமலும் வீட்டிற்குள் நுழைவதை தடை செய்கிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக!
(அல்குர்ஆன் : 24:27)

قَتَادَةَؒ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: اِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوْا عَلي اَهْلِهِ، وَاِذَا خَرَجْتُمْ فَاَوْدِعُوْا اَهْلَهُ السَّلاَمَ.
رواه عبدالرزاق في مصنفه:١٠ /٣٨٩

நீங்கள் யார் வீட்டுக்காவது சென்றால், அந்த வீட்டாருக்கு ஸலாம்” சொல்லுங்கள்! (வீட்டைவிட்டு) வெளியேறும் போதும் அவ்வீட்டாருக்கு ஸலாம்” சொல்லி விடைபெறுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் கதாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்)

عَنْ أَبِي مَالِكِ نِ اْلاَشْعَرِيِّ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ فَلْيَقُلْ: اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لْيُسَلِّمْ عَلَي أَهْلِهِ.

رواه ابوداؤد باب مَايَقُولُ الرجل اذا دخل بيته رقم:٥٠٩٦

ஒருவர் தம் வீட்டில் நுழையும் போது,

(اَللّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَي اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا)

யால்லாஹ்! வீட்டினுள் நுழைவது, மற்றும் வீட்டிலிருந்து வெளியேறுவதின் நலவை உன்னிடம் நான் கேட்கிறேன். நான் வீட்டில் நுழைவதையும் வெளியேறுவதையும் என்னுடைய நன்மைக்குக் காரணமாக ஆக்குவாயாக! அல்லாஹுதஆலா வின் பெயராலேயே நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம் அல்லாஹுதஆலா வின் பெயராலேயே வீட்டைவிட்டு வெளியேறினோம். எங்கள் இரட்சகனாகிய அல்லாஹுதஆலா வின் மீதே நாங்கள் தவக்குல் (நம்பிக்கை) வைத்தோம்’ என்ற துஆவை ஓதியபின், வீட்டாருக்கு ஸலாம் கூறிவிட்டு நுழையவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்)

عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ.

رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢


மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆள் இல்லா வீட்டில் நுழையும் போது ஸலாம்

வீட்டில் யாரும் இல்லையென்றால் நம்முடைய வீடாக இருந்தாலும் சலாம் சொல்லி தான் நுழைய வேண்டும்.

வீட்டிற்குள் வந்துவிட்டதால் எந்த தீங்கும் நமக்கு நேரிடாது யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. சொகுசு அறையில் படுத்து உறங்குபவனுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகையால் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் சாந்தி நமக்குத் தேவைப்படுகிறது. பின்வரும் வசனம் நாம் நமக்கே சலாம் கூறிக்கொள்ள வேண்டும் என கட்டளையிடுகின்றது.

فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏

நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான – பாக்கியம் மிக்க – பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கும்” என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் – நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.  
(அல்குர்ஆன் : 24:61)

பதில் ஸலாம் இல்லையெனில் திரும்பி வருதல்

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏
அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் அதில் நுழையாதீர்கள். (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) “நீங்கள் திரும்பிவிடுங்கள்” என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான்.
(அல்குர்ஆன் : 24:28)

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்த வரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, “”நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன்.

பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “”(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி (6245)

பதில் ஸலாம் மலக்குமார்கள் கூறுகின்றனர்

عَنْ عَبْدِ اللهِ يَعْنِيْ اِبْنَ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلسَّلاَمُ اِسْمٌ مِنَ اَسْمَاءِ اللهِ تَعَالَي وَضَعَهُ فِي اْلاَرْضِ فَاَفْشُوْهُ بَيْنَكُمْ، فَاِنَّ الرَّجُلَ الْمُسْلِمَ اِذَا مَرَّ بِقَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ فَرَدُّوْا عَلَيْهِ كَانَ لَهُ عَلَيْهِمْ فَضْلُ دَرَجَةٍ بِتَذْكِيْرِهِ اِيَّاهُمُ السَّلاَمَ، فَاِنْ لَمْ يَرُدُّوْا عَلَيْهِ رَدَّ عَلَيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُمْ.

رواه البزار والطبراني واحد اسنادي البزار جيد قوي الترغيب:٣ /٤٢٧

ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹுதஆலாவின் பெயர்களில் ஒன்று. அல்லாஹுதஆலா அதை பூமியில் இறக்கி வைத்துள்ளான், எனவே உங்களுக்கிடையே அதை நன்றாகப் பரப்புங்கள். ஏனேனில் ஒரு முஸ்லிம் ஒரு கூட்டத் தாரைக் கடந்து செல்லும்போது அவர் அக்கூட்டத்தாருக்கு ஸலாம் சொல்ல, அவர்கள் இவருக்குப் பதில் சொன்னால், அவர்களுக்கு ஸலாமை ஞாபக மூட்டியதன் காரணத்தால் ஸலாம் சொல்லியவருக்கு அந்தக் கூட்டத்தாரை விட ஒரு படித்தரம் சிறப்புக் கிடைக்கிறது. அவர்கள் இவருக்குப்பதில் சொல்லவில்லை யெனில் மனிதர்களைவிடச் சிறந்த மலக்குகள் இவருடைய ஸலாமுக்குப் பதில் சொல்கின்றனர்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பஸ்ஸார், தபரானீ, தர்ஙீப்)

வரவேற்பின் வார்த்தை ஸலாம்

மிஃராஜ் பயணத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒவ்வொரு வானத்திலும் நுழையும் போது நபிமார்கள் ஸலாம் சொல்லி தான் வரவேற்றார்கள்.

பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல்க தவைத் திறக்கக் கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள்.

பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள்.

பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

எனவே நாம் வரவேற்பு கொடுக்கும் போது ஸலாம் சொல்லி விட்டு பிறகு தான் வாங்க என்று வரவேற்பு அளிக்க வேண்டும். இன்றைக்கு பெரும்பாலும் பலருக்கு ஸலாம் ஒரு பொருட்டாக மதிக்கபடவில்லை என்று தான் நினைக்கிறேன்.

செல்போன் பேசும் போது பலரும் ஸலாம் கூறுவதை மறந்து ஹலோ என்று சொல்கிறார்கள். எதார்த்த வார்த்தைகளான ஹலோ என்பதை தவிர்க்க முடியாத காரணங்களால் நாம் ஸலாம் முதலில் சொல்லி விட்டு பிறகு ஹலோ சொன்னால் எந்த தவறும் இல்லை.

சபைகளிலும் ஸலாம்

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اذَا انْتَهَي اَحَدُكُمْ اِلي مَجْلِسٍ فَلْيُسَلِّمْ، فَاِنْ بَدَا لَهُ اَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ، ثُمَّ اِذَا قَامَ فَلْيُسَلِّمْ، فَلَيْسَتِ اْلاُوْلي بِاَحَقَّ مِنَ اْلآخِرَةِ.

رواه الترمذي وقال: هذا حديث حسن باب ماجاء في التسليم عند القيام …رقم:٢٧٠٦

உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு சபைக்குச் சென்றால் சபையிலுள் ளோருக்கு ஸலாம் சொல்லட்டும். பிறகு உட்கார விரும்பினால் உட்கார்ந்து கொள்ளவும், பின்பு அச்சபையை விட்டு எழுந்து சென்றால் மீண்டும் ஸலாம் சொல்லவும். ஏனேனில், முந்திய ஸலாம் பிந்திய ஸலாமை விட உயர்ந்ததல்ல”, (சந்திக்கும் போது ஸலாம் சொல்வது எவ்வாறு சுன்னத்தோ அவ்வாறே விடைபெறும் போது ஸலாம் கூறுவதும் சுன்னத்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(திர்மிதீ)

கூட்டத்தினரை கடந்து செல்பவர்கள் ஸலாம்

عَنْ عَلِيٍّ ؓ مَرْفُوْعًا: يُجْزِئئُ عَنِ الْجَمَاعَةِ اِذاَ مَرُّوْا اَنْ يُسَلِّمَ اَحَدُهُمْ، وَيُجْزِئئُ عَنِ الْجُلُوْسِ اَنْ يَرُدَّ اَحَدُهُمْ.

رواه البيهقي في شعب الايمان:٦ /٤٦٦

கடந்து செல்லும் கூட்டத்திலிருந்து ஒருவர் ஸலாம் கூறினால், அது அவர்கள் அனைவரின் சார்பாகப் போதுமானதாகிவிடும். அமர்ந்திருப் பவர்களில் ஒருவர் பதில் சொன்னால் அது அவர்கள் அனைவரின் சார்பாகப் போதுமானதாகிவிடும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يُسَلِّمُ الصَّغِيْرُ عَلَي الْكَبِيْرِ، وَالْمَارُّ عَلَي الْقَاعِدِ، وَالْقَلِيْلُ عَلَي الْكَثِيْرِ.

رواه البخاري باب تسليم القليل علي الكثير رقم:٦٢٣١

சிறியவர் பெரியவருக்கு ஸலாம் கூறவும், கடந்து செல்பவர் உட்கார்ந்திருப் பவருக்கு ஸலாம் கூறவும், குறைந்த தொகையினர் அதிக எண்ணிக்கை யுடையோருக்கு ஸலாம் சொல்லவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி)

கணவன் மனைவிக்குள் ஸலாம்

பலர் நண்பர்களிடத்தில் ஸலாம் கூறிக்கொள்வார்கள். ஆனால் தன்னுடைய வீட்டார்களை அல்லது உறவினர்களை சந்திக்கும் போது ஸலாம் கூறமாட்டார்கள். புதிதாக சலாம் கூறுவதற்கு கூச்சமும் உறவும் அவர்களுக்கு தடையாக அமைந்துவிடுகின்றது. கணவன் மனைவியாக இருந்தாலும் தந்தை மகனாக இருந்தாலும் ஸலாம் கூறுவதற்கு தயங்கக்கூடாது. பேசக்கூடாத பேச்சுக்களை பேசுவதற்கு வெட்கப்படாத நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை கடைபிடிக்க ஏன் வெட்கப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வரும்போது ஸலாம் கூறி நுழையும் பழக்கம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி கயவர்கள் அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட நேரத்திலும் ஸலாம் சொல்வதை கைவிடவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2661)

கப்ரஸ்தான் சென்றால் ஸலாம்

عَنْ بُرَيْدَةَ َؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَي الْمَقَابِرِ فَكَانَ قَائِلُهُمْ يَقُولُ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ المُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ.

رواه مسلم باب مَا يقَالَ عَنْد دخول القبور والدعاء لاهلها رقم:٢٢٥٧

கப்ருஸ்தானுக்குச் சென்றால்,

(اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ المُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ )

இவ்வூரில் வசிக்கும் முஃமின்கள், முஸ்லிம்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் விரைவில் வந்து சேர இருக்கிறோம். அல்லாஹுதஆலா விடம் எங்களுக்கும் உங்களுக்கும் ஆரோக்கியத்தைத் தர நாங்கள் இறைஞ்சுகிறோம்” என்று சொல்லவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாப் பெருமக்களுக்கு (ரலி) கற்றுத் தந்தார்கள் என்று ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்)

ஸலாமைக் கொண்டு தொழுகையை முடித்தல்

عن النبي صلى الله عليه و سلم قال مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ – سنن الترمذي

“தொழுகையின் திறவுகோல் (உளூ எனும்) சுத்தமாகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனும்) தஸ்லீம் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56

தொழுகையை முடிக்கும் போது) வலது புறமும், இடது புறமும் திரும்பி ‘அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்’ என்று முகத்தைத் திருப்பி நபி (ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்: திர்மிதீ 272, அபூதாவூத் 845, இப்னுமாஜா 904, அஹ்மத் 3516


வலது புறம் ஸலாம் கூறுவதன் நோக்கம் வலது புறம் உள்ள மனிதர்கள் மற்றும் மலக்குமார்களுக்கும்.
இடது புறம் ஸலாம் கூறுவதன் நோக்கம் இடது புறம் உள்ள மனிதர்கள் மற்றும் மலக்குமார்களுக்கும் ஸலாம் கூறும் எண்ணத்துடன் ஸலாம் சொல்ல வேண்டும்.

மலக்குமார்கள் கூறும் ஸலாம்

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: هَلْ تَدْرُونَ مَنْ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ؟ قَالُوا: اَللّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ الَّذِينَ يُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: إِيتُوهُمْ فَحَيُّوهُمْ، فَيَقُولُ الْمَلاَئِكَةُ: رَبَّنَا نَحْنُ سُكَّانُ سَموَاتِكَ وَخِيَرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ؟ قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي لاَيُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذلِكَ فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ: سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَي الدَّارِ.

رواه ابن حبان (واسناده صحيح):١٦ /٤٣٨

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹுதஆலாவின் படைப்பினங்களில் முதன்முதலாகச் சுவனம் செல்பவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் வினவ, அல்லாஹுதஆலாவும் அவனது ரஸூலுமே மிக அறிந்தவர்கள்” என ஸஹாபாக்கள் (ரலி) பதில் கூறினார்கள்.முதன் முதலாகச் சொர்க்கம் செல்பவர்கள் ஏழை முஹாஜிர்கள், அவர்கள் மூலம் எல்லைப்புறப்பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. சிரமமான வேலைகளில் (அவர்களை முன் வைத்து) அவர்கள் மூலம் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தம்தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய நெஞ்சங்களில் இருக்க அத்தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அவர்களுக்கு மரணம் வந்துவிடுகிறது. கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா மலக்குகளிடம், நீங்கள் அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள் என்று கூறுவான், மலக்குகள் (ஆச்சரியமடைந்தவர்களாக) எங்கள் இரட்சகனே! நாங்களோ உன்னுடைய வானத்தில் வசிப்பவர்கள், உன்னுடைய படைப்பினங்களில் சிறந்தவர்கள். (அப்படியிருந்தும்) நீ எங்களை அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லக் கட்டளையிடுகிறாயே?” (இதன் காரணமென்ன) என்று வினவுவார்கள். இவர்கள் என்னை வணங்கிக் கொண்டிருந்தவர்கள். எனக்கு வேறு யாரையும் இணை ஆக்காமல் இருந்தவர்கள். இவர்கள் மூலம் எல்லைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டன. சிரமமான காரியங்களில் (இவர்களை முன்னிறுத்தி) இவர்கள் மூலம் பாதுகாப்புப் பணி மேற் கொள்ளப்பட்டது. தம் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை இவர்களின் நெஞ்சங்களில் இருந்த நிலையிலேயே, அத்தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இவர்களுக்கு மரணம் வந்தது’ என்று அல்லாஹுதஆலா கூறுவான். எனவே, மலக்குகள் அச்சமயம் எல்லா வாசல்களிலிருந்தும், நீங்கள் பொறுமையை மேற்கொண்டதால் உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்! இவ்வுலகில் உங்கள் முடிவு எவ்வளவு உயர்ந்ததாகி விட்டது!” என்று கூறியவர்களாக அவர்களிடம் வருவார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இப்னு ஹிப்பான்)

ஸலாம் கூறுவதன் நன்மைகள்

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ ﷺ: عَشْرٌ، ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: عِشْرُوْنَ، ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاَتُهُ فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: ثَلاَثُوْنَ.

رواه ابوداؤد باب كيف السلام رقم:٥١٩٥

ஹஜ்ரத் இம்ரானிப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒருவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, (اَلسَّلاَمُ عَلَيْكُمْ) என்று சொன்னார், அவரது ஸலாமுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள். பிறகு அவர் சபையில் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், பத்து” என்று சொன்னார்கள், (அவரது ஸலாமின் காரணமாக அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்பட்டுவிட்டன) பிறகு மற்றோருவர் வந்து (اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ) என்று சொன்னார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவருக்குப் பதில் சொன்னார்கள், பிறகு அவர் அச்சபையில் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இருபது” என்றார்கள், (இருபது நன்மைகள் இவருக்கு எழுதப்பட்டுவிட்டன). பின்பு மூன்றாவதாக ஒரு மனிதர் வந்து (اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاَتُهُ) என்றார், நபி (ஸல்) அவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் சொன்னார்கள், பிறகு அவர் அச்சபையில் உட்கார்ந்து கொண்டார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முப்பது” என்றார்கள், (முப்பது நன்மைகள் வருக்கு எழுதப்பட்டுவிட்டன)”.

(அபூதாவூத்)

அபூதாவூத் என்ற கிரந்தத்தில் முஆதுப்னு அனஸ் (ரலி) அவர்களின் மூலம் அறிவிக்கப்படுகிறது “அதன் பின்னர் ஒருவர் வந்தார் “அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு வமஃபிரதுஹூ
என்று சொன்னார்கள் அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாற்பது 40 என்றார்கள். என்றும் கூறப்பட்டுள்ளது”.

ஸலாம் கூறுவதன் பலன்

உயர்வை ஏற்படுத்தும்


عَنْ اَبِى الدَّرْدَاءِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللّهِ ﷺ: اَفْشُوا السَّلاَمَ كَىْ تَعْلُوْا.

رواه الطبرانى واسناده حسن مجمع الزوائد:٨/٦٥

நீங்கள் உயர்வு அடைய ஸலாமைத் தாராளமாகப் பரப்புங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

அன்பை உருவாக்க.. அதிகரிக்க.

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتَّي تُؤْمِنُوْا، وَلاَتُؤْمِنُوْا حَتَّي تَحَابُّوْا، اَوَلاَ اَدُلُّكُمْ عَلي شَيْءٍ اِذَا فَعَلْتُمُوْهُ تَحَابَبْتُمْ؟ اَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ.

رواه مسلم باب بيان انه لا يدخل الجنة الا المؤمنون…رقم:١٩٤


நீங்கள் முஃமினாக ஆகாதவரை (உங்கள் வாழ்க்கை ஈமான் உள்ள வாழ்க்கையாக ஆகாதவரை) சுவர்க்கத்தில் நுழைய முடியாது, நீங்கள் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை உண்மை விசுவாசி ஆகமுடியாது.

உங்களுக்கிடையில் நேசத்தை உண்டாக்கும் செயலை உங்களுக்கு நான் சொல்லவா? (அது தான்) உங்களுக்கிடையே ஸலாமைத் தாராளமாகப் பரப்புவது என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பரக்கத் ஏற்படும்

عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ لِيْ رَسُوْلُ اللهِ ﷺ: يَا بُنَيَّ! اِذَا دَخَلْتَ عَلَي اَهْلِكَ فَسَلِّمْ يَكُوْنُ بَرَكَةً عَلَيْكَ وَعَلي اَهْلِ بَيْتِكَ.

رواه الترمذي وقَالَ: هذا حديث حسن صحيح غريب باب ماجاء في التسليم … رقم:٢٦٩٨

என் அருமை மகனே! நீர் உமது வீட்டில் நுழையும்போது வீட்டாருக்கு ஸலாம் சொல்லும்! இது உமக்கும், உமது வீட்டாருக்கும் பரக்கத் உண்டாகக் காரணமாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திர்மிதீ

முந்திக் கொண்டு ஸலாம் கூறுவதன் நன்மைகள்

عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اَوْلَي النَّاسِ بِاللهِ تَعَالَي مَنْ بَدَأَهُمْ بِالسَّلاَمِ.

رواه ابوداؤد باب في فضل من بدا بالسلام رقم:٥١٩٧

அல்லாஹுதஆலாவின் நெருக்கம் பெற மிகவும் தகுதியுடையவர் ஸலாம்’ சொல்வதில் முந்துபவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்)

عَنْ عَبْدِ اللهِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْبَادِيئُ بِالسَّلاَمِ بَرِيْيءٌ مِنَ الْكِبْرِ.

رواه البيهقي في شعب الايمان:٦ /٤٣٣

ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர் பெருமையை விட்டும் நீங்கிவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பைஹகீ)

ஸலாம் சொல்லாதவர்களுக்கு எச்சரிக்கை

சிலர் முஸ்லிமான சகோதரனுக்கு சலாம் கூறுவதில்லை. சலாம் சொன்னாலும் பதில் சலாம் கூறுவதில்லை. கொள்கை விஷயத்தில் முரண்பாடுகள் இருப்பதால் எதிரியைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். பதில் சலாம் சொல்வதை குற்றமாக பாவிக்கிறார்கள். இந்த கெட்டப் பழக்கத்தை நம்மக்கள் அனைவரும் கைவிடவேண்டும். ஏனென்றால் பதில் சலாம் சொல்வது ஒவ்வொரு முஸ்லிமுடையக் கடமை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமிற்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாசாவை பின்தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1240)

கஞ்சத்தனம்


عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَعْجَزُ النَّاسِ مَنْ عَجِزَ فِي الدُّعَاءِ، وَاَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ فِي السَّلاَمِ.

رواه الطبراني في الاوسط وقال: لا يروي عن النبي ﷺ الابهذا الاسناد ورجاله رجال الصحيح غير مسروق بن المرزبان وهو ثقة مجمع الزوائد :٨/٦١

மக்களில் மிகவும் இயலாதவர் துஆச் செய்ய இயலாதவர், (துஆச் செய்யாதவர்) மக்களில் மிகவும் கருமித்தனம் உடையவர் ஸலாம் சொல்வதில் கருமித்தனம் செய்பவர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

கியாமத் நாளின் அடையாளம்


عَنِ ابْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اَشْرَاطِ السَّاعَةِ اَنْ يُسَلِّمَ الرَّجُلُ عَلَي الرَّجُلِ لاَ يُسَلِّمُ عَلَيْهِ اِلاَّ لِلْمَعْرِفَةِ.

رواه احمد:١ /٤٠٦


(முஸ்லிம் என்ற காரணம் அல்லாமல்) அறிமுகத்தின் காரணமாக (அறிமுகமானவருக்கு) மட்டும் ஸலாம் சொல்வது கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹமத்)

தூக்கத்தை கெடுக்கும் ஸலாம் வேண்டாம்

عَنِ الْمِقْدَادِ بْنِ اْلاَسْوَدِ ؓ قَالَ (فِي حَدِيْثٍ طَوِيْلٍ۞): فَيَجِيْءُ رَسُوْلُ اللهُ ﷺ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ تَسْلِيْمًا لاَ يُوْقِظُ النَّائِمَ وَيُسْمِعُ الْيَقْظَانَ.

رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب كيف السلام رقم:٢٧١٩

ஹஜ்ரத் மிக்தாதுப்னு அஸ்வத் (ரலி) கூறுகிறார்கள், இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள், தூங்குபவர் விழித்துவிடாதபடியும், விழித்திருப்பவர் செவியுறும்படியும் ஸலாம் சொல்வார்கள்”.

(திர்மிதீ) , முஸ்லிம் (4177), அஹ்மத் (22692)

சைக்கினை செய்து மெதுவாக ஸலாம் கூறுதல்

யூதர்களைப் போல் ஸலாம் கூறுதல் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் கூறுதலாகிறது (வார்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) மூலமும். சைக்கினையின் மூலமும் ஆகும்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி­) அவர்கள்.

நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா பாகம் : 6 பக்கம் : 92

இன்றைக்கு நம்மில் பலர் ஸலாம் கூறும் போது வார்த்தைகளை சொல்வதில்லை வெறும் சாடைகளாலே ஸலாம் சொன்னதாக இருக்கிறோம்.

பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாச­ல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி­)

நூல் : திர்மிதி (2621)

எத்தனை முறை பார்த்தாலும் ஸலாம் கூறுவது

ஸலாம் கூறுவது சுன்னத்து , அதற்கு பதில் கூறுவது கட்டாயம்!
நாம் ஒருவருக்கு ஒரு தடவை ஸலாம் சொன்னால் , அவர் அதற்கு பதில் ஸலாம் கூறுவார். கொஞ்சம் நேரம் கழித்து அதே நபர் திரும்பி வந்து ஸலாம் கூறினால் ” நாம் என்ன சொல்வோம்? ”இவர் இப்பத்தானே ஸலாம் சொன்னார் மறும்படியும் ஸலாம் கூறுகிறார் என்று நம் மனதிற்குள் நினைப்போம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி­) அவர்கள்

நூல் : அபூதாவூத் (4523)

ஸலாம் சொல்லி அனுப்புதல்

ஒருவரை நேரடியாக நாம் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது போல் நம் முன்னே இல்லாதவருக்காக இன்னொருவரிடம் ஸலாம் கூறி அனுப்பலாம். யாரிடம் ஸலாம் சொல்லி அனுப்பப்படுகிறதோ அவர் சம்பந்தப்பட்டவருக்கு இதைத் தெரிவிக்க வேண்டும். யாருக்கு ஸலாம் கூறி அனுப்பபட்டதோ அவரும் பதில் ஸலாம் கூற வேண்டும்.

அபூஹுரைரா (ரழி) அறிவிப்பதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

என் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் உடனே வரவும் என்ற செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள். மேலும் ஸலாமும் சொல்லி அனுப்பினார்கள்.

நூல் : புகாரி 1284, 5655, 6655

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காணாமல் அவர்களின் குடும்பத்தினர் அஞ்சிய போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிழலில் பகல் தூக்கம் தூங்கியதைக் கண்ட அபூகதாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு ஸலாமையும் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் (அருளையும்) சொல்லி அனுப்பியுள்ளனர் எனக் கூறினார்கள்…

நூல் : புகாரி 1821, 1822

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மனைவியை மணமுடித்து வீட்டுக்குள் சென்றார்கள். எனது தயார் உம்மு சுலைம் இனிப்பான உணவைத் தயார் செய்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். என் தாயார் உங்களுக்கு ஸலாம் கூறினார்கள் என்று தெரிவித்தேன்………. என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

நூல் : நஸயீ 2572

ஆயிஷாவே இதோ ஜிப்ரீல் உனக்கு ஸலாம் கூறுகிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹ என்று மறுமொழி கூறினார்கள். (வஅலைஹி என்றால் அவர் மீது என்று பொருள்)

நூல் : புகாரி 3217, 3768, 6201, 6249, 6253

ஸலாத்தை எத்தி வைக்க வந்த அவருக்கும் சலாம் சொல்லி அனுப்பிய அவருக்கும் சேர்த்து அலைக்க வ அலைக்குமுஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்

ஸலாம் சொல்லக்கூடாத நேரங்கள்

ஒருவர் மலம் ஜலம் கழிக்கும் போது அவருக்கு சலாம் சொல்லக்கூடாது. அப்படியே ஒருவர் கூறினாலும் நாம் அந்த நேரத்தில் பதில் சலாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் இந்நேரங்களில் சலாம்மட்டுமல்ல பொதுவாக எந்தப் பேச்சையும் பேசக்கூடாது. சாதாரண பேச்சுகளையே தவிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறபோது பிரார்த்தனையாக இருக்கக்கூடிய சலாத்தை எப்படி அந்நேரத்தில் கூறமுடியும்?. எனவே நபி (ஸல்) அவர்கள் இதை தடைசெய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருமனிதர் அவர்களை கடந்து சென்றார். அப்போது அவர் (பெருமானருக்கு) சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் சலாம் கூறவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (555) திர்மிதி (83)

நபிமார்களுக்கு இறைவன் சொல்லும் ஸலாம்

سَلٰمٌ عَلٰى نُوْحٍ فِى الْعٰلَمِيْنَ‏
“ஸலாம்” ஈடேற்றம் நூஹ்வுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது.
(அல்குர்ஆன் : 37:79)

سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏
(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) “இப்ராஹீமுக்கு “ஸலாம்” ஈடேற்றம் உண்டாவதாகுக” (என்றும் கூறுகின்றனர்.)
(அல்குர்ஆன் : 37:109)

سَلٰمٌ عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‏
(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் “ஸலாம்” ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).
(அல்குர்ஆன் : 37:120)

سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏
(ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) “இல்யாஸுக்கு “ஸலாம்” ஈடேற்றம் உண்டாவதாகுக!” (என்று கூறுகின்றனர்).
(அல்குர்ஆன் : 37:130)

وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ‌‏
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
(அல்குர்ஆன் : 37:181)



சுவனவாசிகள் ஸலாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்

اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا‏
ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்.
(அல்குர்ஆன் : 56:26)

மரணத்தின் போது நல்லடியார்களுக்கு சொல்லும் ஸலாம்

فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِ‏
அவரை நோக்கி “வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உங்களுக்கு “ஸலாம்” ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும்.
(அல்குர்ஆன் : 56:91)

பின்னூட்டமொன்றை இடுக